Saturday, September 21, 2024

மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி. தினகரன்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு மூலமாக விநியோகம் செய்யப்படும் விலையில்லா மிதிவண்டிகள் பழுதடைந்த நிலையிலும், தரமற்ற நிலையிலும் இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தரமற்ற முறையில் விநியோகிக்கப்படும் விலையில்லா மிதிவண்டிகளில் இருக்கும் பழுதுகளை நீக்குவதற்கு தனி செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், முடியாத பட்சத்தில் அந்த மிதிவண்டிகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், விலையில்லா ஆடு, மாடு வழங்கும் திட்டம் என தொலைநோக்கு சிந்தனையுடன் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக முடக்கிவரும் தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி கடும் கண்டனத்திற்குரியது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் மேல்நிலைக்கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்ட விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை முடக்குவதையே குறிக்கோளாய் கொண்டிருக்கும் தி.மு.க. அரசால் லட்சக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் தரமானதாக இருப்பதை உறுதி செய்வதோடு, தரமற்ற முறையில் மிதிவண்டிகளை வழங்கிய ஒப்பந்ததாரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024