ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை: பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்த ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமாருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு கேடரில் 1989-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பிரமோத் குமார் தேர்வானார். பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், மேற்கு மண்டல ஐஜியாக இருந்தபோது திருப்பூரில் ரூ.870 கோடி பாஸி நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்நிறுவனத்தின் இயக்குநரைக் கடத்தி பணம் பறித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து அவர் 2012-ம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பதை எதிர்த்து பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்து, அவரை மீண்டும் பணியமர்த்தும்படி 2016-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, பதவி உயர்வு வழங்கக் கோரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பதவி உயர்வு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எனக்கு எதிரான வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளதால், எனக்கு வழக்கமாக வழங்கப்படும் பதவி உயர்வுகள் வழங்கப்படவில்லை. எனவே, தீர்ப்பாயஉத்தரவை ரத்து செய்து டிஜிபிபதவி உயர்வுக்கு என்னைபரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரமோத் குமாருக்கு பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டது. மேலும், அவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு டிஜிபியாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவாலை விட ஒரு வருடத்துக்கு முன்னரே ஐபிஎஸ் பதவிக்குத் தேர்வானவர் பிரமோத் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024