Saturday, September 21, 2024

வங்காளதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் காலவரையின்றி மூடல்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

வங்காளதேசத்தில் மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து இந்திய விசா மையங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாக்கா,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்படுவதாக அதிபர் அறிவித்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா பதவியை விட்டு விலகிய பிறகும் அங்கு நிலைமை மோசமாகவே உள்ளது. தற்போது அங்கு செயல்படும் அரசு இல்லாத நிலையை பயன்படுத்தி சிலர் இந்து சிறுபான்மையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வங்காளதேசத்தில் உள்ள இந்திய விசா மையங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து இந்திய விசா விண்ணப்ப மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "வங்காளதேசத்தில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, அங்குள்ள அனைத்து இந்திய விசா மையங்களும் (IVAC) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த விண்ணப்ப தேதி எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். மேலும் அவர்கள் அடுத்த வேலை நாளில் தங்கள் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024