என் தாயை பார்க்க முடியாமல் மனம் உடைந்தேன் – ஷேக் ஹசீனாவின் மகள் உருக்கம்

by rajtamil
0 comment 3 views
A+A-
Reset

புதுடெல்லி,

வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியமிக்கப்படுவதாக அதிபர் அறிவித்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்-உஸ்-ஜமான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், என் தாயை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாமல் மனம் உடைந்து இருக்கிறேன்" என்று வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்ததை அடுத்து, தனது கருத்தை சைமா வசேத் முதல்முறையாக பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வங்காள தேசத்தை நான் மிகவும் விரும்புகிறேன். எனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிர் இழப்புகளால் மனம் வேதனை அடைந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் என் தாயை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்துவிட்டது. அதேநேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் பொறுப்பை வகிப்பதில் உறுதியாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

சைமா வசேத் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனராக கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பொறுப்பை ஏற்ற முதல் வங்கதேசத்தவர் இவர். அதோடு, இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண் இவர்.

You may also like

© RajTamil Network – 2024