பாலியல் புகார்: பணியிடை நீக்கத்துக்கு எதிரான மருத்துவர் சுப்பையாவின் மனு தள்ளுபடி

by rajtamil
0 comment 15 views
A+A-
Reset

பாலியல் புகார்: பணியிடை நீக்கத்துக்கு எதிரான மருத்துவர் சுப்பையாவின் மனு தள்ளுபடி

சென்னை: பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையா சண்முகத்துக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் சுப்பையா, காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பின்னர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். இந்த உத்தரவுகளை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சுப்பையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செவிலியர்கள் உடை மாற்றும் அறையில் யாரோ ரகசிய கேமரா வைத்து படம் பிடித்துள்ளனர். இதுதொடர்பாக சுப்பையா போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த வீடியோவில் இருப்பது மருத்துவர் சுப்பையா கிடையாது. எனவே, அவருக்கு எதிரான புகாரின் மீது நடத்தப்பட்ட விசாகா குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்,” என்றும் வாதிட்டிருந்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், “குற்றம்சாட்டப்பட்டுள்ள சுப்பையாவுக்கு எதிராக இதுபோன்ற பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக வருகிறது. இவரை போன்ற நபர்களுக்கு நீதிமன்றம் கருணைக் காட்டக்கூடாது. பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே சுப்பையா இடமாற்றம் செய்யப்பட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு வேறு காரணம் உள்ளது,” என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றத்தை எதிர்த்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like

© RajTamil Network – 2024