“நான் குற்றவாளி அல்ல!” – நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி அளித்த பதில்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

“நான் குற்றவாளி அல்ல!” – நீதிமன்றத்தில் ஆஜரான செந்தில் பாலாஜி அளித்த பதில்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஆஜரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி எஸ்.அல்லி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தபோது, “நான் எந்த குற்றமும் செய்யவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.அல்லி முன்பாக அவர் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கறிஞர் என். பரணிக்குமாரும், அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷும் ஆஜராகியிருந்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக குளுக்கோஸ் ஏற்றுவதற்காக செலுத்தப்பட்ட ஊசி பொருத்தப்பட்ட கையுடன் செந்தில் பாலாஜி ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை தரப்பு குற்றச்சாட்டுக்களை நீதிபதி அல்லி முதலில் ஆங்கிலத்திலும், பின்னர் தமிழிலும் ஒவ்வொன்றாக படித்துக்காட்டி, குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார். அப்போது இந்த குற்றச்சாட்டுகளை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நான் நிரபராதி. இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனக்கு எதிராக பொய்யாக புனையப்பட்ட வழக்கு. அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறேன். தன் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை. தனக்கு எதிரான சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன். நான் குற்றவாளி அல்ல,” என்று அவர் பதிலளித்தார்.

இதையடுத்து, சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்காக இந்த வழக்கை வரும் ஆக.16ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அதுவரை செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். குற்றச்சாட்டுப்பதிவு முடிந்ததும் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

You may also like

© RajTamil Network – 2024