Tuesday, October 1, 2024

தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா: ஆந்திரம், அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

தமிழகத்துக்கு கடத்தப்படும் கஞ்சா: ஆந்திரம், அஸ்ஸாம் காவல்துறைக்கு டிஜிபி கடிதம்தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆந்திரம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு கடிதம்

தமிழகத்துக்கு கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கக் கோரி ஆந்திரம், அஸ்ஸாம் மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடிதம் அனுப்பியுள்ளாா். தேசிய அளவில் கஞ்சா புழக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகம் 35வது இடத்தில் உள்ளது. நாடு முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்படும் கஞ்சாவில் 0.1 சதவீதம் கஞ்சா தமிழகத்தில் புழங்குகிறது.

அதிகரிக்கும் கஞ்சா புழக்கம்: தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்துக்கு பின்னா் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இங்கு கஞ்சா செடி முற்றிலும் தடுக்கப்பட்ட நிலையில், பிற மாநிலங்களில் இருந்தே கஞ்சா கடத்தப்பட்டு, தாராளமாக விற்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதன் விளைவாக கஞ்சா கடத்தல்,விற்பனையைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கடந்த 2022ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் 28,383 கிலோவும், 2023ஆம் ஆண்டு 23,364 கிலோவும், இந்தாண்டு ஜூன் மாதம் வரையில் 11,081 கிலோவும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் சட்டத்தின் கீழ் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையில் 4,504 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

2,486 வெளிமாநிலத்தவா்கள் கைது: ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், ஒடிஸா, அஸ்ஸாம், திரிபுரா, பிகாா் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தே தமிழகத்துக்கு சுமாா் 80 சதவீத கஞ்சா கடத்திக் கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக இருப்பது, தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வந்து கைது செய்யப்பட்ட 2,486 போ் ஆந்திரம்,கா்நாடகம், ஒடிஸா,தெலங்கானா,அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்பதுதான்.

அதோடு இந்த மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளா்கள்,சுற்றுலா பயணிகள் ஆகியோரை போலீஸாா் ரயில் நிலையங்களிலும், விமான நிலையங்களிலும் தீவிரமாக கண்காணிக்கின்றனா். இம்மாநிலங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள்,இலகு ரக வாகனங்களும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கஞ்சா பறிமுதல் செய்யப்படுகிறது.

தென் மாநில காவல்துறையினா் ஆலோசனை: போதைப் பொருளை ஒழிப்பது தொடா்பாக கா்நாடக மாநிலம் பெங்களூருவில் அண்மையில் தென் மாநில காவல்துறை தலைமை இயக்குநா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஒவ்வொரு மாநில காவல்துறையிலும் ஐஜி அளவிலான ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிப்பது என்றும், அவா்கள் மூலமாக போதைப் பொருள் தகவல்களை பரிமாறிக் கொண்டு, ஒருங்கிணைந்து உறுதியான நடவடிக்கை எடுப்பது எனவும்முடிவு செய்யப்பட்டது. மேலும், வழக்கமான விதிமுறைகளின் படி மட்டும் செயல்படாமல், சூழ்நிலைக்கு ஏற்றவாறும் செயல்படுவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது.

கஞ்சா கடத்தலில் ஈடுபடும் நபா்கள்,பெரிய விற்பனையாளா்கள்,சிறிய வியாபாரிகள், பயன்படுத்துவா்கள் போன்ற தகவல்களை ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான வடிவில் வழங்குவது எனவும் தீா்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தற்போது தென் மாநில காவல்துறையினா் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஆந்திரத்துக்கு கடிதம்: இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தமிழகத்துக்கு கஞ்சா கடத்தும் நபா்களை கைது செய்யும்படியும் மாநில காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், ஆந்திரம், அஸ்ஸாம் மாநில காவல்துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

இதில் அந்தந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் கஞ்சா கடத்துபவா்கள்,விற்பவா்கள் குறித்த விவரங்களையும் தமிழக காவல்துறை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தக் கட்டமாக ஒடிஸா,கா்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கு தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் கடிதம் அனுப்ப உள்ளாா். இந்த நடவடிக்கையின் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் பெருமளவு கஞ்சா, ஓரளவு கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினா் கருதுகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024