மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது கனவு – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

ஒரு மாணவன் கூட திசை மாறாமல் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

கோவை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி, தங்கள் கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதம்தோறும் ரூ,1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் விழாவில் பேசிய அவர் கூறியதாவது:-

இந்த விழாவுக்கு வருவதற்கு முன்பு நேற்று இரவே வங்கிக்கணக்கில் ரூ.1,000 வரவு வைக்க உத்தரவிட்டுவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டங்களை தீட்டினாலும் ஒரு சில திட்டங்கள்தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும்.இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்க கோவையை தேர்ந்தெடுக்க காரணம், பாசமான மக்கள் கோவையை சேர்ந்தவர்கள். தொழில் துறையில் சிறந்த மாவட்டம் கோவை. தலை சிறந்த கல்வி நிறுவனங்கள் இங்கு உள்ளன.

மக்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடிய திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடங்கி வைத்து வருகிறது. திராவிட மாடல் அரசு என்றாலே அது சமூக நீதிக்கான அரசுதான். திராவிட மாடல் வழியில் முதல்-அமைச்சரான நான், ஒரு தந்தை நிலையில் உருவாக்கிய திட்டம் 'தமிழ்ப் புதல்வன்'. நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்து மாணவர்கள் கல்வி பயில உருவாக்கிய திட்டம் இது. பள்ளிக் கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும். ஒரு மாணவன் கூட திசை மாறாமல் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும். மாணவர்கள் உயர்கல்விக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது கனவு.

மாணவர்களின் கல்விக்கு எதுவும் தடையாக இருக்கக் கூடாது. அதற்கு உறுதுணையாக நான் இருக்கிறேன். உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட நான் அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறேன். உங்கள் வெற்றிக்கு பின்னால் என்னுடைய திராவிட மாடல் அரசு இருக்கிறது. மறந்துவிட வேண்டாம். தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒலிம்பிக் வீராங்கனை வினேஷ் போகத் எப்படிப்பட்ட தடைகளை சந்தித்தாலும் போராடினார். போராடிய வினேஷ் போகத் அனைவரும் பாராட்டக்கூடிய அளவுக்கு கொடிகட்டி பறந்துவருகிறார். மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்பு வசதி உள்ள மாநிலமாக தமிழ்நாடு உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024