Tuesday, September 24, 2024

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து 2 அணைகளில் இருந்தும் தமிழக காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. இதன்படி 2 அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 15 ஆயிரத்து 965 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து இருந்தது.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்போது 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பிலிகுண்டு காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பாதுகாப்பு காரணங்கள் கருதி 26-வது நாளாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

© RajTamil Network – 2024