Saturday, September 21, 2024

பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

பேராசிரியர் நியமன முறைகேடு வழக்கு: சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை: சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி ரஹ்மத்துல்லா என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சென்னை பல்கலைக்கழகத்தில் யுஜிசி விதிமுறைகளை மீறி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு அதிகாரம் வழங்கி கடந்த 2018-ம் ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பல்கலைக்கழகத்தில் 22 பேராசிரியர்களின் பணிநியமனம் முறையாக நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் கடந்த 2018-ம் ஆண்டு இதுதொடர்பாக அளித்த புகார் பரிசீலிக்கப்படாமல் நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டினர்.

பின்னர் அந்த புகார் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையில் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்இந்த நடவடிக்கைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் எனவும் சென்னை பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024