புதுச்சேரி: சாராயக்கடையை அகற்றக்கோரி துணைநிலை ஆளுநரிடம் மக்கள் மனு

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

புதுச்சேரி: சாராயக்கடையை அகற்றக்கோரி துணைநிலை ஆளுநரிடம் மக்கள் மனு

புதுச்சேரி: பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரிடம், அப்பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு அளித்தனர்.

புதுச்சேரி மாநிலத்தின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் கடந்த 7-ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று ஊசுடு மற்றும் பாகூர் ஏரிகளில் முதன் முதறையாக ஆய்வை மேற்கொண்டார்.

அவருடன் அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வை முடித்த துணைநிலை ஆளுநர் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது அவரிடம் பாகூர் ஏரிக்கரை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள சாராயக்கடையை அகற்றக்கோரியும், சாரயக்கடை இருந்த அரசு இடத்தில் புதியதாக அங்கன்வாடி கட்டித்தர நடவடிக்கை எடுக்ககோரியும் பொதுமக்கள் மனு அளித்தனர். மேலும் சாராயக்கடை இருந்த இடத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கன்வாடி மையம் என சிறிய பேனரும் வைத்துள்ளனர்.

துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்த பிறகு பொதுமக்கள் கூறியதாவது: பாகூர் ஏரிக்கரை, லெனின் நகர் பகுதிகளில் சாராயக்கடை வரக்கூடாது. இதனை எங்களால் அனுமதிக்க முடியாது. மக்களை, பெண்களை, பள்ளி, கல்லூரி மாணவர்களை பாதிக்கக்கூடிய சாராயக்கடையை இந்த பகுதியில் திறக்க அனுமதிக்க மாட்டோம்.

இது சம்மந்தமாக பாகூர் ஏரியை ஆய்வு செய்ய வந்த துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்க வந்தோம். ஆனால் மனு அளிப்பதற்கு கூட போலீஸார் அனுமதி மறுத்து தடுத்து நிறுத்தினர். பிறகு இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்து விளக்கினோம். அவர் சாராயக்கடை அகற்றம் குறித்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றார். நாங்கள் சாராயக்கடை வேண்டாம் என்று சொல்கின்றோம். ஆனால் சாராயக்கடையை திறக்கின்றனர். ரேஷன்கடை வேண்டும் என்று சொன்னால் அதனை திறப்பதில்லை.

சட்டப்பேரவையில் முதல்வர் புதிய மதுக்கொள்கைக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கூறுகின்றார். சாராயக்கடைகள், ரெஸ்டோ பார்களை திறந்தால் லாபம் வரும். ரேஷன் கடை திறப்பால் என்ன லாபம் கிடைக்கும் என்று கேட்கின்றார். முதல்வராக இருந்து கொண்டு இப்படி பேதுவது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. வாக்கு கேட்டு மட்டும் வருகின்றார்கள். நாங்களும் வாக்களிக்கின்றோம். எனவே பாகூர் ஏரிக்கரை பகுதியில் சாராயக்கடைகளை அகற்ற துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

You may also like

© RajTamil Network – 2024