Friday, September 20, 2024

வயநாட்டில் மீண்டும் தொடங்கிய தேடுதல் பணிகள்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

வயநாடு,

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக உருக்குலைந்தன. இயற்கையின் கோரத்தாண்டவத்தால் 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் முப்படை வீரர்கள் 10 நாட்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100-க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்தது.

நிலச்சரிவால் சிக்கி மண்ணுக்குள் வீடுகள் புதைந்த இடங்கள், சாலியாற்று பகுதிகள், காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வனப்பகுதிகள் என அனைத்து இடங்களிலும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் தரப்பில் சுமார் 200 பேர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்த தேடுதலில் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. அதன்படி வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 418 ஆக இருந்தது.

இந்தநிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி நேற்று முன் தினம் வயநாடு சென்றார். இதனால் அங்கு தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி டெல்லி சென்றபின் நேற்று 13-வது நாளாக தேடுதல் பணி மீண்டும் தொடங்கியது.

காலை 9 மணிக்கு முன்னதாக பதிவு செய்தவர்கள் மட்டுமே தேடுதல் பணிக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மலைப்பகுதிகள், பள்ளத்தாக்கு பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது லேசான மழை பெய்தது. அப்போது கந்தன்பாறை பள்ளத்தாக்கு பகுதியில் 2 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களின் உடற்பாகங்கள் டி என் ஏ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டன. மற்றொரு உடல் பகுதி பரப்பன் பாறையில் கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட அதே பகுதியில் இந்த உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 420 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் சாலியாறு ஆற்றின் கீழ் பகுதியில் சிறப்பு தேடுதல் பணி இன்று மீண்டும் தொடங்க உள்ளது. அதிகாரப்பூர்வ தகவல்படி, 126 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, 1,184 பேர் தற்போது 14 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக சூரல்மாலா, முண்டக்கை மற்றும் புஞ்சிரிவட்டம் ஆகிய கிராமங்களில் ஏற்பட்ட பேரழிவுகரமான நிலச்சரிவைத் தொடர்ந்து 138 பேர் இன்னும் காணவில்லை என்று வயநாடு மாவட்ட நிர்வாகம் கடந்த புதன்கிழமை பட்டியலை வெளியிட்டது. அதன்பின்னர் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போனவர்களில் 24 குழந்தைகள், 57 பெண்கள் மற்றும் 49 ஆண்கள் மற்றும் பீகாரைச் சேர்ந்த மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அடங்குவர்.

You may also like

© RajTamil Network – 2024