காட்டு காளியம்மன் கோவில் விழா: பக்தர்கள் மீது ஏறி நின்று அருள்வாக்கு சொன்ன சாமியார்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

குழந்தை வரம், திருமணம் வேண்டி தரையில் படுத்திருந்த பக்தர்கள் மீது சாமியார் ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறினார்.

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு அருகே உள்ள தீர்த்தம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒடுகத்தூரில் இருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுக்கு நடுவே அமைந்துள்ள இந்த கிராமத்தில் வன காட்டு காளியம்மன் கோவில் உள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்தம் பகுதியில் வசித்து வந்த ஆதி பழங்குடியினத்தவர்கள் இயற்கையை மட்டுமே சார்ந்து வாழ்ந்து வந்தனர். அவர்கள் அங்குள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று காடுகளில் கிடைக்கும் கிழங்குகள் மற்றும் தேன் போன்றவைகளை எடுத்து உண்டும், விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர்.

அப்படி ஒரு நாள் அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்று கிழங்கு எடுத்து கொண்டிருக்கும் போது மண்வெட்டியால் ஓரிடத்தில் தோண்டியபோது ரத்தம் கொட்டியதாம். அப்போது, புகை மூட்டத்துடன் ஓர் அசரீரி வந்து 'நான் இங்கு தான் இருக்கிறேன், உலகத்தை காக்க வனத்தில் குடி கொண்டிருக்கிறேன்' நீ திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் அந்த நபர் திரும்பி பார்த்தார். மேலும் இதை பற்றி ஊர் பெரியவர்களிடம் நடந்ததை கூறினார். அதன் பின்னர் ஊர் பொதுமக்கள் அங்கு சென்று தோண்டி பார்த்த போது கிழங்கில் அம்மன் வடிவில் ஒரு உருவம் இருந்துள்ளது.

மேலும், இதனை தோண்டிய நபர் அன்றே இறந்து போனதாகவும், அவரின் சடலத்தை அம்மன் தோன்றிய இடத்தின் அருகிலேயே புதைத்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர், காலப்போக்கில் முழுக்க முழுக்க மூங்கில்களால் தனக்கு தானே கோவில் போன்று அம்மன் அரண் அமைத்து கொண்டதாக நம்பப்படுகிறது. அன்று முதல் இன்று வரை காலம் காலமாக கிழங்கு வடிவிலான அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் வனத்தில் தோன்றியதால் அம்மனுக்கு வன காட்டு காளியம்மன் என்று பெயரிட்டு அழைத்தனர்.

இந்நிலையில், ஆண்டு தோறும் கொண்டாடப்படும் வன காட்டு காளியம்மன் கோவில் திருவிழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, ஊர் மக்கள் கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர்.

அதனைத் தொடர்ந்து, குளக்கரையில் இருந்து அம்மனின் கிரீடத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து எடுத்து வந்து வன காட்டு காளியம்மனுக்கு வைத்து சிறப்பித்தனர்.

அப்போது, வழி நெடுகிலும் குழந்தை வரம், திருமணம் வேண்டி பக்தர்கள் தரையில் படுத்திருந்தனர். அந்த பக்தர்கள் மீது சாமியார் ஏறி நின்று சாமியாடி அருள் வாக்கு கூறினார்.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வன காட்டு காளியம்மனை பக்தியுடன் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தால் அவர்கள் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம். அதேபோல், குழந்தை இல்லாதோர் இங்குள்ள மூங்கில் மரத்தில் தொட்டில் கட்டி மடி ஏந்தி சாமியாடி வரும் போது மனமுருக வேண்டி கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று கூறுகின்றனர். சாமியாடி வரும் போது ஏராளமான பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடி ஏந்தி வேண்டிக்கொண்டனர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Others/Devotional

You may also like

© RajTamil Network – 2024