Friday, September 20, 2024

விமானநிலையம் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டம்: சாத்தியகூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

விமானநிலையம் – பூந்தமல்லி மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க திட்டம்: சாத்தியகூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடக்கம்

சென்னை: மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் தடம் அமைக்க, மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னையில் 2 வழித்தடங்களில்சுமார் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடத்தில் 116.1 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படுகிறது. இதில் 3-வது வழித்தடம் 45.4 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலும், 4-வது வழித்தடம் 26.1 கி.மீ. தொலைவுக்கு கலங்கரைவிளக்கம் – பூந்தமல்லி வரையிலும்,5-வது வழித்தடம் 44.6 கி.மீ தொலைவுக்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளை வரும் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான4-வது வழித்தடத்தை பரந்தூர் வரையும், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை நீட்டிக்கதிட்டமிட்டு, விரிவான திட்டஅறிக்கை தயாரிக்க இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளன.

கோயம்பேடு – ஆவடி வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிப்பு தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரைட்ஸ் (RITES) நிறுவனத்திடமும், பூந்தமல்லி – பரந்தூர் வரையான மெட்ரோ ரயில் தடம்தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தம் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து குன்றத்தூர் வழியாக பூந்தமல்லி வரை செல்லும் புதிய வழித்தடத்துக்கான, சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையை தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த புதிய வழித்தடத்துக்கு குன்றத்தூர் மற்றும் திருநீர்மலை ஆகிய 2 இடங்கள் வழியாகசெல்ல ஆய்வு நடைபெறுகிறது.

இந்த புதிய வழித்தடம் சுமார்15 கி.மீ. உள்ளடக்கியது. இதற்கானசாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணிக்கான ஒப்பந்தமும் ஆர்வி அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி – பரந்தூர் புதிய விமான நிலையம் வரை 43.63 கி.மீ நீளத்துக்கு 19 உயர்மட்ட மெட்ரோ நிலையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் மெட்ரோ ரயில் நிறுவனம் ஈடுபடுகிறது. ஒட்டுமொத்தமாக மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பரந்தூர் வரை மொத்தம் 60 கி.மீ.,தொலைவுக்கு புதிய வழித்தடத்தை அமைக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான மெட்ரோ வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கையும், மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பூந்தமல்லி வரையிலான மெட்ரோவழித்தடத்துக்கு விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை எனஇரு பணிகளும் வரும் நவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரத்தில்பரந்தூரில் அமைய உள்ள புதியவிமான நிலையத்துக்கு சென்றடைய முடியும் என்று மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024