Tuesday, October 1, 2024

தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க உதவ வேண்டும்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்க உதவ வேண்டும்: ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: தாழ்தள பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும்போது அவர்களுக்கு உதவுவது குறித்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மண்டல மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்ஆல்பி ஜான் வர்கீஸ்அனுப்பிய சுற்றறிக்கை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இயக்கப்படும் தாழ்தள பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் பயணிக்க முற்படும்போது, சக்கர நாற்காலிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் உள்ள சாய்தளத்தை உபயோகப்படுத்தி பேருந்துக்குள் அவர்கள் ஏற உதவிசெய்ய வேண்டும். அவர்கள் பேருந்தில் பயணம் செய்யும்போது, அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் சக்கர நாற்காலிகளை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் லாக் செய்ய நடத்துநர்கள் உதவ வேண்டும்.

அவ்வாறு லாக் செய்யவில்லை என்றால் ஓட்டுநர் பேருந்தை இயக்கும்போதோ அல்லதுபிரேக் போடும்போது சக்கர நாற்காலிஅங்கும் இங்கும் நகர வாய்ப்புள்ளது. எனவே, சக்கர நாற்காலியை பேருந்தில் அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கவனமாக லாக் செய்ய வேண்டும்.

அதேபோல், அவர்கள் இறங்கும்போது சாய்தள படிக்கட்டை இயக்கி சக்கர நாற்காலியுடன் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக இறங்க உதவ வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏறவும், இறங்கவும் எவ்வித புகாரும் வராத வண்ணம் அவர்களுக்கு உதவிசெய்ய ஓட்டுநர், நடத்துநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் தமது பணிமனை சார்ந்த தாழ்தள பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் பேருந்துகளில் எளிதில் பயணம் செய்ய வரையறுக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும்.

You may also like

© RajTamil Network – 2024