Wednesday, October 2, 2024

78-வது சுதந்திர தின விழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

78-வது சுதந்திர தின விழாவுக்கு தலைவர்கள் வாழ்த்து

சென்னை: இந்திய நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: மதவாத சக்திகளை மாய்க்கவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் கட்டிக் காக்கவும் இந்நாளில் சூளுரையேற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலைதூக்காமல் முறியடிக்கும் பணியை சிறப்பாக செய்யும் வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையைப் பாதுகாப்போம்.

இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் முத்தரசன்: இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்று பல களப்பலிகளைத் தந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சமூக, பொருளாதார விடுதலைக்கான போராட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறது. நமது தாய்த் திருநாட்டின் விடுதலையை தக்க வைத்துக்கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் பயன்கள் ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க, தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என இந்நாளில் சபதம் ஏற்போம்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாடு வளம் பெற சாதி, மத பேதங்களைக் கடந்து ஒற்றுமையுடன் அனைவரும் வாழ வேண்டும். நாடு உனக்கு என்ன செய்தது என்பதைவிட, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பதற்கேற்ப, பெற்ற விடுதலையை நாம் அனைவரும் பேணிக் காக்க வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்: எண்ணற்ற சுதந்திரப் போராட்டதியாகிகள் போராடிப் பெற்றுத் தந்தசுதந்திரத்தைப் பேணிக் காப்பதோடு, சாதி, மத, மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் வாழ இந்நாளில் உறுதியேற்போம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, பல தியாகங்களை செய்து விடுதலை பெற்ற நாம், இப்போது மக்களுக்கு சமூகநீதி வழங்கப்படுவதையும், அச்சமில்லா நல்லாட்சி கிடைப்பதையும் சாத்தியமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வறுமையில் இருந்து விடுதலை, அனைவருக்கும் கவுரவமான வேலை, கண்ணியமான வாழ்க்கை,சமத்துவமான சமுதாயம் அமைக்க இந்நாளில் உறுதியேற்போம்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: இயற்கையை மதிக்கக்கூடிய இந்தியாவை உருவாக்கவும் போதை, மது, சூது இல்லா இந்தியாவை அமைக்கஇந்த நாளில் உறுதியேற்போம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: மத்திய அரசு, நல்லரசான இந்திய நாட்டை வல்லரசாக மாற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற இந்த சுதந்திர தினம் நல்வழிகாட்டட்டும்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: நல்ல நிர்வாகம் நாட்டு மக்களுக்கு கிடைக்க வேண்டும். வருங்காலத்தில் மாற்றம் ஏற்பட்டு ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், வளர்ச்சியும் அனைத்து மக்களுக்கு ஏற்படவும், வகுப்பு ஒற்றுமை ஓங்கவும், வறுமை ஒழியவும் இந்த சுதந்திர நாள் வழிவகுக்கட்டும்.

வி.கே.சசிகலா: அமைதி, வளம், வளர்ச்சி என்ற நம் அம்மா சுட்டிக்காட்டிய வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்போம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.

காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் பால்தினகரன்: 78-வது சுதந்திர தினம் நம் நாட்டுக்கு இரு மடங்கு ஆசீர்வாதத்தை கொண்டுவரட்டும். சமாதானம் பெருகி தேசத்தில் சுபிட்சமும் செழிப்பும் உண்டாகட்டும். ஆட்சியாளர்கள் நல்லாட்சிக்குரிய வழிமுறைகளை பின்பற்றி நாட்டில் உண்மையான சுதந்திரம் நிலவ பணியாற்ற மனதுருகி பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவிசையத் அசினா, கோகுல மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் எம்.வி.சேகர், தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி.ஜி.சிவா, இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் முனிருத்தீன் ஷெரீப், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.முஸ்தபா, தமிழ்நாடு மாநில உருது அகாடமி துணைத் தலைவர் நயிமூர் ரஹ்மான், இந்திய கிறிஸ்துவ மதச்சார்பற்ற கட்சி தலைவர் எம்.எஸ்.மார்டீன், எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், முன்னாள் எம்எல்ஏ நிஜாமுதீன் உள்ளிட்டோரும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024