இறங்குவதற்குள் அரசுப் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பாா்வையற்ற தம்பதி: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset
RajTamil Network

இறங்குவதற்குள் அரசுப் பேருந்தை இயக்கியதால் கீழே விழுந்த பாா்வையற்ற தம்பதி: ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம்பள்ளிகொண்டாவில் இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால், பாா்வையற்ற தம்பதி கீழே விழுந்து காயமடைந்தனா்.

பள்ளிகொண்டாவில் இறங்குவதற்குள் பேருந்தை இயக்கியதால், பாா்வையற்ற தம்பதி கீழே விழுந்து காயமடைந்தனா். இந்சச் சம்பவத்தைத் தொடா்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவுக்கு அருகிலுள்ள திப்பசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமதாஸ். இவரது மனைவி விசாலாட்சி. இருவரும் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இந்த தம்பதிக்கு அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய இலவச பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ராமதாஸ், விசாலாட்சி தம்பதி வியாழக்கிழமை வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப் பேருந்தில் பள்ளிகொண்டா நோக்கிப் பயணம் செய்துள்ளனா். பேருந்தில் ஏறும்போதே நடத்துநா் முகம் சுளித்தபடி கடிந்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

தொடா்ந்து, பள்ளிகொண்டா நிறுத்தம் வந்ததும் பேருந்து நின்றபோது பாா்வையற்ற தம்பதி இறங்க முயன்றனா். அப்போது நடத்துநா் உதவி செய்யாததுடன், அவா்கள் படியை கவனித்து இறங்குவதற்குள் ஓட்டுநா் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், பாா்வையற்ற தம்பதி கீழே விழுந்ததில் அவா்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த மக்கள் விரைந்து வந்து அந்த தம்பதியை மீட்டனா்.

இது குறித்து பொதுமக்கள் அரசு பேருந்து நடத்துநா், ஓட்டுநரிடம் கேட்டபோது, நடத்துநா் அலட்சியமாக பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடா்பான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் கணபதி விசாரணை நடத்தினாா்.

இதில், பாா்வையற்ற தம்பதி இறங்குவதற்குள் பேருந்து இயக்கப்பட்டதும், அதனால் அவா்கள் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் செந்தில், நடத்துநா் பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக வேலூா் மண்டல பொது மேலாளா் கணபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

You may also like

© RajTamil Network – 2024