இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கொடை விழா கோலாகலம்

by rajtamil
0 comment 25 views
A+A-
Reset

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம்.

சாத்தூர்,

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்பர். ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டு காணப்படும். அந்த வகையில் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கடைசி வெள்ளிக்கிழமையான 16-ந் தேதி (இன்று) நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால், பன்னீர், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் மாவிளக்கு, அக்னிச்சட்டி, பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்தனர். மாலை 3 மணியளவில் சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அர்ச்சுனா ஆற்றை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பக்தர்களின் வசதிக்காக தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. பக்தர்கள் வருகையையொட்டி 1,200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் (பொ) சுரேஷ், பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

You may also like

© RajTamil Network – 2024