பயன்படாத பொருள்களில் கலைக்கூடம்!

by rajtamil
0 comment 11 views
A+A-
Reset
RajTamil Network

பயன்படாத பொருள்களில் கலைக்கூடம்!சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்தின் கடைகோடியான கல்வராயன் மலையில் உள்ள சேர்வாய்ப்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு குடியேறியுள்ளார் பிரபல திரைப்பட வரைகலை இயக்குநர் ஜி.சி.ஆனந்தன்.

சென்னையில் இருந்து சேலம் மாவட்டத்தின் கடைகோடியான கல்வராயன் மலையில் உள்ள சேர்வாய்ப்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு குடியேறியுள்ளார் பிரபல திரைப்பட வரைகலை இயக்குநர் ஜி.சி.ஆனந்தன்.

இவர் மலைக் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதோடு, பயன்படாத பழைய இரும்பு, நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ணைக் கவரும் கலைப்பொருள்களையும், கலைக்கூடத்தையும் உருவாக்கி கண்போரை வியக்கவும் வைக்கிறார்.

அவரிடம் பேசியபோது:

'கேரள மாநிலத்துக்கு உள்பட்ட கோழிக்கோடு எனது பூர்வீகம். ஐம்பது ஆண்டுக்கு முன்னரே, குடும்பத்தோடு சென்னைக்கு குடிபெயர்ந்த எனது தந்தை, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்தார்.

சிறுவயதிலேயே ஓவியக்கலை மீது ஆர்வம் கொண்டேன். ஓவிய ஆசிரியர் பயிற்சியைப் பெற்று, திரைத் துறையில் நுழைந்தேன். வரைகலை இயக்குநர்கள் பாகுபலி சாபுசிரில், ரஜீவன் உள்ளிட்டோருடன் உதவியாளராகப் பணிபுரிந்தேன். ஜெயம், வெண்ணிலா கபடிக் குழு, புலிவால் உள்ளிட்ட திரைப்படங்களிலும், முந்நூறுக்கும் மேற்பட்ட விளம்பரங்களிலும் வரைகலை இயக்குநராகப் பணியாற்றினேன்.

ஒருமுறை சேலம் மாவட்டத்துக்கு சுற்றுலா வந்தபோது, கல்வராயன்மலைக் கிராமங்களின் இயற்கை வளத்தால் ஈர்க்கப்பட்டு, சேர்வாய்பட்டு கிராமத்தில் வெள்ளிமலை சாலையில் 2 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கினேன்.

நகர்ப்புற வாழ்க்கை முறையைவிட, இயற்கையான மலைக் கிராம வாழ்க்கை முறையில் தனி சுகம் கிடைக்கும் என்பதால், இங்கேயே குடும்பத்தோடு குடியேறிவிட்டேன்.

பயன்படாத பழைய இரும்பு, நெகிழிப் பொருள்களைக் குப்பையாகக் குவித்து சுற்றுச்சூழலைப் பாழாக்குவதைத் தவிர்த்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சொட்டுநீர் பாசனக் குழாய்களைப் பயன்படுத்தி பூங்கா குடையும், பைபர் பொருள்களைக் கொண்டு மான் கொம்பு உள்ளிட்ட கண்ணைக் கவரும் பல்வேறு கலைப்பொருள்களை உருவாக்கிவிட்டேன். இவை எனது கலைக்கூடத்தில் உள்ளன. காண்போர் இப்படியும் கலை நயத்தோடு உருவாக்கி மீண்டும் பயன்படுத்த முடியுமா? என வியக்கும் அளவுக்கு இருக்கும்.

வாகனங்களின் பழைய டயர்களை எனது 'பாரஸ்ட் கபே' என்ற இயற்கை முறை சிற்றுண்டிக் கடையின் இருக்கைகளாகவும், இரும்பு உதிரிபாகங்களை மேஜைகளாகவும் மாற்றியமைத்துள்ளேன்.

எனது வீட்டிலும் சிற்றுண்டிச்சாலையிலும் பயன்பாட்டிலுள்ள பெரும்பாலான பொருள்கள், பயன்படாத பழைய பொருள்களைக் கொண்டு மறு சுழற்சி முறையில் உருவாக்கப்பட்டதாகும்.

கரோனா காலத்தில் எனது குடும்பத்தினருடன் இணைந்து, தோட்டத்தில் இருந்து மண் எடுத்து, குளிரூட்டப்பட்ட நட்சத்திர விடுதி அறையைப்போல ரம்மியான சூழலைத் தரும் ஒரு மண் குடிலை அமைத்துள்ளேன். தேனீ வளர்ப்பிலும் ஆர்வம் காட்டிவருகிறேன்.

விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கை அங்கக முறையில் காபி, மிளகு, பாக்கு, காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறேன். மாசுபாடற்ற மலை கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்வதும் மன நிறைவை தருகிறது.

இந்த கலையை தற்கால இளைஞர்களுக்கும் கற்பிக்க விரும்புகிறேன். எனது பணிகளுக்கு எனது மனைவி கங்காதேவி, மகள்கள் ஆதியாஸ்ரீ, ஸ்ரீ சிவானி ஆகியோர் ஆதரவு அளிக்கின்றனர்' என்கிறார் ஆனந்தன்.

You may also like

© RajTamil Network – 2024