Saturday, September 21, 2024

விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு

by rajtamil
0 comment 14 views
A+A-
Reset

விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு

சென்னை: இலவச மின் இணைப்பு பெற்று விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள மின் இணைப்பு விவரங்களை கணக்கெடுக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக அரசு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. இதற்காக ஏற்படும் செலவை மின் வாரியத்துக்கு, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. தமிழகத்தில் தற்போது 23.56 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. ஒரு இணைப்புக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் செலவாகிறது.

விவசாயத்துக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தால் வேளாண் துறைக்கு ஆண்டுக்கு ரூ.7,280 கோடி செலவு ஏற்படுகிறது. சிலர் விவசாய இணைப்பு பெற்றுவிட்டு, அந்த மின்சாரத்தை விவசாயம் அல்லாத வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் எழுகின்றன.

இந்நிலையில், விவசாய மின் இணைப்பு பெற்று, விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாமல் உள்ள இணைப்புகள் மற்றும் நீண்டகால பயன்பாட்டில் இல்லாத இணைப்புகளை கணக்கெடுத்து, 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளுக்கு வேளாண் துறைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளன. அவை அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை தங்கள் நிலங்களில் பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது.

இத்தகைய விவரங்களை கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்கவே அரசு கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தபணிகளை மாவட்ட வாரியாகச் சென்று கண்காணிக்க அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024