Friday, September 20, 2024

டி20 உலகக்கோப்பை: உகாண்டா சுழற்பந்து வீச்சாளர் பிராங்க் புதிய சாதனை

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

43 வயது சுழற்பந்து வீச்சாளர் பிராங்க் நுபுகா 4 ஓவர்கள் வீசி 2 மெய்டனுடன் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

கயானா,

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை கயானாவில் நடந்த 9-வது லீக் ஆட்டத்தில் பப்புவா நியூ கினி – உகாண்டா (சி பிரிவு) அணிகள் மோதின. 'டாஸ்' ஜெயித்த உகாண்டா பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பப்புவா நியூ கினி அணி, உகாண்டா வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19.1 ஓவர்களில் 77 ரன்னில் சுருண்டது. ஹிரி ஹிரி (15 ரன்), லியா சியாகா, கிப்லின் டோரிகா (தலா 12 ரன்) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை. உகாண்டா தரப்பில் 43 வயது சுழற்பந்து வீச்சாளர் பிராங்க் நுபுகா 4 ஓவர்கள் வீசி 2 மெய்டனுடன் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் 4 ஓவர்கள் பந்து வீசி குறைவாக ரன் கொடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு நடப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க பவுலர் நோர்டியா 7 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

பின்னர் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய உகாண்டாவும் எளிதில் இலக்கை எட்டிப்பிடித்துவிடவில்லை. 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (6.3 ஓவரில்) இழந்து தள்ளாடியது. இதற்கு மத்தியில் 4-வது வீரராக களம் கண்ட ரியாத் அலி ஷா (33 ரன், 56 பந்து, ஒரு பவுண்டரி) பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு வித்திட்டார். உகாண்டா 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றியை ருசித்தது. தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று இருந்த ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த அறிமுக அணியான உகாண்டாவுக்கு, உலகக் கோப்பை போட்டிகளில் கிடைத்த முதல் வெற்றி இதுவாகும்.

You may also like

© RajTamil Network – 2024