கனகசபை மீது நின்று தரிசனம்: உயர் நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் விளக்கம்

by rajtamil
Published: Updated: 0 comment 28 views
A+A-
Reset

கனகசபை மீது நின்று தரிசனம்: உயர் நீதிமன்றத்தில் பொது தீட்சிதர்கள் விளக்கம்

சென்னை: “சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தைத் தவிர, பக்தர்கள் கனகசபை மீது நின்று தரிசனம் செய்வதை யாரும் தடுக்கவில்லை,” என பொது தீட்சிதர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழாவின் போது, கனகசபை மீது நின்று பக்தர்கள் தரிசனம் செய்வதை அனுமதிக்கக் கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர் சார்பில் வழக்கறிஞர்கள் ஹரிசங்கர், வர்ஷா ஆகியோர் ஆஜராகி பதில்மனு தாக்கல் செய்தனர். அதில், “கனகசபையில் நின்று வழிபாடு நடத்த பக்தர்களுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. தினமும் நடைபெறும் ஆறுகால பூஜையின்போது மட்டும் கனகசபையில் இருந்து வழிபாடு நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனி திருமஞ்சனம் ஏற்கெனவே முடிந்து விட்டதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அறநிலையத்துறை தரப்பில், “கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய எந்த தடையுத்தரவும் இல்லை. ஆனாலும் விழாக் காலங்களில் பக்தர்களை கனகசபை மீது நின்று தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை” என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ஆறு கால பூஜை நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபையில் இருந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும். யாரும் தடுக்கக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024