Saturday, September 21, 2024

“திமுகவை அணுகுவதில் பாஜக நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது” – செல்லூர் ராஜூ

by rajtamil
0 comment 22 views
A+A-
Reset

“திமுகவை அணுகுவதில் பாஜக நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது” – செல்லூர் ராஜூ

மதுரை: ”திமுகவுடனான பாஜக அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது,” என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாநகர அதிமுக ஆலோசனைக் கூட்டம் மாநகர செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் நடந்தது. அதன்பிறகு செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், ''அண்ணாமலை பற்றி நிறைய பேசலாம். தப்பாகப் போய்விடும். பிறகு அது மீம்ஸ் வடிவில் வந்துவிடும். தேர்தல் நேரத்தில் அண்ணாமலை திமுகவையும், அதன் தலைவர்களையும் மிக கேவலமாக பேசினார்.

தற்போது பாஜக திமுகவுடன் நெருக்கம் காட்டி வருவதால் அதே அண்ணாமலை அரசியலில் விமர்சனத்துக்கு ஒரு எல்லை வேண்டும் என்று கூறுகிறார். 100 ரூபாய் கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கைபேசியில் அழைத்தவுடன் ஓடிப்போய் அண்ணாமலை அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பாஜகவினர் எல்லோரும் கருணாநிதியை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தார்கள். தேர்தலுக்கு முன் இதே பாஜகவினரும், பிரதமர் மோடியும், எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் இப்படிதான் வானளாவ புகழ்ந்தார்கள்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய தந்தைக்காக நிகழ்ச்சியை நடத்துவதை யாரும் குறை சொல்ல முடியாது. அந்த விழாவுக்கு தமிழக அரசுதான் நிதியை செலவிட்டுள்ளது. தலைமை செயலாளர்தான், அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். மத்திய அமைச்சர் முருகனும், இது மத்திய அரசு விழா இல்லை என்று கூறிவிட்டார். அதனால், தற்போது திமுக மாட்டிக் கொண்டு முழிக்கிறது.

அதேநேரத்தில் மத்திய பாஜக அரசு மைனாரிட்டி அரசாக மாறிவிட்டது. அதனால், இந்த அரசு நீடிக்க, அனைத்து கட்சிகள் ஆதரவும் தேவைப்படுவதால் திமுகவுடனான அணுகுமுறையில் அண்ணாமலை மட்டுமில்லாது அவர்கள் கட்சி போக்கிலே தற்போது மாற்றம் தெரிகிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் கலைஞர் 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழா. பாஜகவிடம் திமுக மாட்டிக் கொண்டது. திமுகவிடம் பாஜக மாட்டிக் கொண்டது'' என்று அவர் தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024