Tuesday, October 1, 2024

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆக.21) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2004-ம் ஆண்டே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், “ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும், அதை கண்காணிக்கவும் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “குழுக்கள் அமைத்திருந்தாலும், இன்னும் எத்தனை ஹெக்டேர் அரசு நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது?. எத்தனை ஹெக்டேர் பரப்பில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன?. லட்சக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அரசு அமைத்துள்ள இந்த குழுக்களால் என்ன பயன்? முறையாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறதா?. அந்தக் குழுக்கள் களஆய்வு மேற்கொண்டு கண்காணிக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்து, தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

You may also like

© RajTamil Network – 2024