Friday, September 20, 2024

‘உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்’ – சரத்பவார் கட்சி உறுதி

by rajtamil
0 comment 21 views
A+A-
Reset

மும்பை,

'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திரபவார்) கட்சி, சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மராட்டிய மாநிலத்தில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியை அமைத்துள்ளன. நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி மராட்டிய மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் 30 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) 9 இடங்களில் வெற்றி பெற்றது.

இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற 'இந்தியா' கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே கலந்து கொள்ளவில்லை. இதனால் அவர் அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருகிறதா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ்(சரத்சந்திரபவார்) கட்சியின் தலைவர் ஜெயந்த் பட்டீல் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், 'உத்தவ் தாக்கரே மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல மாட்டார்' என்று உறுதியாக தெரிவித்தார்.

மேலும் மராட்டிய மாநிலத்தில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதில் சரத் பவார் உறுதியாக உள்ளார் என்றும், தற்போதைய மாநில அரசின் மீது மராட்டிய மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர் என்றும் தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் வரும் அக்டோபர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024