Friday, September 20, 2024

ரூ.80 கோடி செலவில் புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சர் எ.வ.வேலு

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

புனரமைக்கப்படும் வள்ளுவர் கோட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை,

கலைஞர் கருணாநிதியால் 1976-ம் ஆண்டு சென்னை வள்ளுவர் கோட்டம், சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டது. தற்போது, வள்ளுவர் கோட்ட புனரமைப்புப் பணிகள் ரூ.80 கோடியில் நடைபெற்று வருகிறது. அதேபோல் சைதாப்பேட்டை எம்.சி.ராஜா ஆண்கள் விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடியில், ஒரு லட்ச சதுர அடி பரப்பளவில், தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கூடிய ஆண்கள் விடுதிக் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். அப்போது புனரமைப்பு பணிகளை குறித்த காலத்திற்கு முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொறியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இந்த கோட்டத்தில் மாலை நேரங்களில் சென்னை மக்கள் வள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், பொழுதுபோக்கு பூங்கா மற்றும் சிறப்பு உணவகம் அமைக்கப்பட உள்ளது. புதிய யுக்தியை பயன்படுத்தி மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. 1,400 பேர் ஒரே சமயத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டு ரசிக்கும் அளவிற்கு மிகப்பெரிய குளிர்சாதன கூட்டு அரங்கு அமைக்கப்படுகிறது. சென்னையில் பெரிய அரங்கமாக இது அமைய உள்ளது. குறள் மண்டபம் புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024