த.வெ.க. கொடிக்கு புதிய சிக்கல்: யானை சின்னத்தை நீக்க கோரிய பகுஜன் சமாஜ் கட்சி..?

by rajtamil
0 comment 20 views
A+A-
Reset

யானை சின்னத்தை நீக்க கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சி தொடங்கிய நிலையில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த் கட்சியை பதிவு செய்தார். அதன் பிறகு 10,12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 சட்டமன்ற தொகுதிவாரியாக முதல் மூன்று இடம்பிடிக்கும் மாணவர்களுக்கு த.வெ.க சார்பில் பாராட்டு விழா நடத்தி விஜய் அவர்களை நேரில் கவுரவித்தும் வருகிறார்.

இந்த சூழலில் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். அந்த கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. மேலும் தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகக் கொடிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை படத்தை த.வெ.க கொடியில் பயன்படுத்துவது தேர்தல் விதியின்படி தவறானது என்றும், உடனடியாக விஜய் கட்சியின் கொடியில் உள்ள யானை படத்தை நீக்க வேண்டும், இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு வழங்கப்பட்டு, வழக்கும் தொடுக்கப்படும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி கொடியில் நீல நிறத்தில் யானை சின்னம் இடம்பெற்றிருக்கும். விஜய் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்கியாக வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி புகார் மனு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024