Tuesday, September 24, 2024

கிருஷ்ணகிரி விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் இயங்கி வந்த ஒரு தனியார் பள்ளியில் என்.சி.சி. முகாம் என்ற பெயரில் போலி முகாம் நடந்தது. அதில் பங்கேற்ற 8-ம் வகுப்பு மாணவி, போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் சிவராமன், 13 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிவராமன் மற்றும் சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர், தாளாளர் உள்பட மொத்தம் 11 பேரை பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். கைதாவதற்கு ஒரு நாளைக்கு முன்பு கைதுக்கு பயந்து, சிவராமன் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனால் சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் மருத்துவர்களின் பரிந்துரைப்படி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முக்கிய குற்றவாளி சிவராமன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் வழக்கின் விசாரணை அடுத்தக்கட்டத்திற்கு எப்படி செல்லும் என்ற கேள்வி எழும்பியது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன் வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் முறையீடு செய்தார். அப்போது இது குறித்து வழக்காக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த போலீஸ் ஐ ஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி இந்த குழுவினர் நேற்று முதல் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024