அரியலூர் அருகே தேளூர் அரசுப் பள்ளியில் கம்ப்யூட்டர்கள் வெடித்து சிதறியதில் புகைமூட்டம்: 23 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

அரியலூர் அருகே தேளூர் அரசுப் பள்ளியில் கம்ப்யூட்டர்கள் வெடித்து சிதறியதில் புகைமூட்டம்: 23 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல்

அரியலூர்: அரியலூர் அருகே அரசுப் பள்ளியில் மின் கசிவால் கம்ப்யூட்டர்கள் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் 23 மாணவ, மாணவிகளுக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அரியலூரை அடுத்த தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் ஓர் அறையில் 8-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பூட்டப்பட்டிருந்த அந்த அறையிலிருந்து நேற்று மதியம் 12 மணியளவில் புகை வெளியேறியுள்ளது. சில மாணவ, மாணவிகள் அங்கு சென்று கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கிருந்த 2 கம்ப்யூட்டர்கள் வெடித்துச் சிதறி, அதிக அளவில்புகை வெளியேறியது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கு சென்ற மாணவ, மாணவிகள் மற்றும் அருகில் உள்ள அறையில் இருந்தமாணவ, மாணவிகள் என மொத்தம் 23 பேருக்கு மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மின் கசிவு காரணமாக கம்ப்யூட்டர்கள் வெடித்துச் சிதறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை சந்தித்து, ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவ,மாணவிகளை சந்தித்து, ஆறுதல் கூறினார்.

You may also like

© RajTamil Network – 2024