Friday, September 20, 2024

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினருடன் வழக்கை விசாரிக்க தடை கோரி மனு

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினருடன் வழக்கை விசாரிக்க தடை கோரி மனு

சென்னை: மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினருடன் வழக்குகளை விசாரிக்க தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விமல்மேனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி, தேசிய, மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் தலைவர் மற்றும் நீதித்துறை உறுப்பினர், நிபுணத்துவ உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டும். ஆனால்தற்காலிக அவசர தேவைகளுக்காக ஒற்றை உறுப்பினருடன் செயல்படவும் நுகர்வோர் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.

சட்ட விரோதம்: தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தற்போது தலைவராகவும், நீதித்துறை உறுப்பினராகவும் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பதவி வகித்து வருகிறார்.

கடந்த ஓராண்டாக ஒற்றைஉறுப்பினருடன் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுவது சட்டவிரோதமானது. எனவே ஒற்றை உறுப்பினருடன் ஆணையம் செயல்பட அனுமதிக்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது, என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும்.

அதுவரை மாநில குறைதீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினருடன் வழக்குகளை விசாரிக்கவும், முடிவுகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும். ஒற்றை உறுப்பினர் பிறப்பித்த உத்தரவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும், என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒற்றை உறுப்பினருடன் வழக்குகளை விசாரிக்க தடை விதிப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024