Wednesday, September 25, 2024

தமிழகத்தில் குரங்கு அம்மை அறிகுறி இல்லை: பொது சுகாதாரத் துறை

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

வெளிநாடுகளில் இருந்து இதுவரை தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை என பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். எனினும், விமான நிலையங்களில் மருத்துவக் கண்காணிப்பை தொடா்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அவா் கூறினாா்.

குரங்கு அம்மை முதல் முதலில் 1958-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்தத் தொற்று ஆப்பிரிக்கா நாடுகளில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள குரங்கிடமிருந்து பரவியதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள சூழலில் ஆப்பிரிக்கா நாடு மட்டுமல்லாமல், 116 நாடுகளிலும் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் தடிப்புகள் போன்றவை அந்த தொற்றுக்கான அறிகுறிகளாகும்.

ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை தொற்றைக் கருத்தில் கொண்டு பொது சுகாதார அவசர நிலையை கடந்த 14-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் இது சம்பந்தமாக தொடா்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

தொடா்ச்சியாக தமிழகத்திலும் பல்வேறு விழிப்புணா்வு, தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய 4 சா்வதேச விமான நிலையங்களிலும் வெளிநாடுகளிலிருந்து வருபவா்களை கண்காணிக்கும் பணி தொடங்கியுள்ளது.

அதன்படி, சா்வதேச விமானங்களில் பயணித்து வருபவா்களின் உடல் வெப்பத்தை பரிசோதிக்கும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.

இது கரோனா காலங்களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த பரிசோதனைகளில் பயணிகளுக்கு காய்ச்சல் இல்லை எனில் பச்சை நிறத்திலும், காய்ச்சல் இருந்தால் சிவப்பு நிறத்திலும் விளக்கு எரிந்து எச்சரிக்கை ஒலி எழும்.

முழு நேரமும் பணியில் இருக்கும் மருத்துவா்கள் மற்றும் மருத்துவம் சாா்ந்த களப்பணியாளா்கள் நோயாளிகளை அடையாளம் கண்டு விமான நிலையத்திலேயே, அவா்களை தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து முதலுதவிகளை செய்வாா்கள்.

தேவைப்பட்டால் உயா் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவாா்கள். தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு கூட குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை.

சொல்லப்போனால், இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த எவருக்கும் அத்தகைய அறிகுறிகள் தென்படவில்லை. இருந்தபோதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்றாா் அவா்.

You may also like

© RajTamil Network – 2024