Friday, September 20, 2024

ஜாதிவாரி கணக்கெடுப்பு: ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள மத்திய அமைச்சர்

by rajtamil
0 comment 13 views
A+A-
Reset

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான்.

இந்தியாவில் 90 சதவிகித மக்கள் நிர்வாக அமைப்பைவிட்டு விலகி வெளியே இருப்பதாகவும், அவர்களுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்பதை தெளிவுபடுத்தியிருந்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இந்த நிலையில், ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளார் லோக் ஜன்சக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான்.

இந்த நிலையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது, ஏனெனில், அரசின் திட்டங்கள் பல, ஜாதியை கருத்திற்கொண்டே வகுக்கப்பட்டுள்ளன என சிராக் பாஸ்வான் பேசியுள்ளார்.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற்ற லோக் ஜன்சக்தி கட்சியின்(ராம் விலாஸ் அணி) தேசிய செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவராக சிராக் பாஸ்வான் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “எனது கட்சி ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைபாட்டைக் கொண்டுள்ளது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் ஜாதியை கருத்திற்கொண்டே வகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு ஜாதிகளுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அரசின் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

இந்த நிலையில், ஜாதிவாரியாக மக்கள் தொகை விவரம் அரசுக்கு தேவை.இந்த தரவுகள் இருந்தால்தான், நிதிப்பங்கீடு முறையாக ஒதுக்கீடு செய்ய முடியும்” என்றார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஹாஜிபூர் எம்.பி. – லோக் ஜனசக்தி கட்சி(ராம் விலாஸ் பஸ்வான் அணி) தலைவர் சிராக் பாஸ்வான் மத்திய அமைச்சரவையில் உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார்.

You may also like

© RajTamil Network – 2024