சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: வலுவான பாறைகளைக் கடந்தது ‘காவிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்

by rajtamil
Published: Updated: 0 comment 17 views
A+A-
Reset

சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: வலுவான பாறைகளைக் கடந்தது ‘காவிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம்

சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது வழித்தடத்தின் ஒருபகுதியாக பசுமை வழிச்சாலை – அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில், வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை “காவிரி” சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்துள்ளது. இந்த இயந்திரம் அடுத்த மாத இறுதியில் அடையாறு சந்திப்பை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் ஒரு வழித்தடம் மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் (45.4 கி.மீ) ஆகும். இத்தடத்தில் பசுமை வழிச்சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.226 கி.மீ. தொலைவுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு பிப்.16-ம் தேதி தொடங்கியது.

முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘அடையாறு’ ஆகிய இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் அடுத்தடுத்து சுரங்கப் பணிகளைத் தொடங்கின. இந்த இயந்திரங்கள் அடையாறு ஆற்றை அடுத்தடுத்து கடந்தன. தற்போது, இந்த இயந்திரங்கள் அடையாறு சந்திப்பை நோக்கி நகர்கின்றன. முதல் சுரங்கம் தோண்டும் இயந்திரமான ‘காவிரி’ கடந்த 2 மாதம் முன்பு, அடையாறு மேம்பாலத்தின் கீழ் இருந்தது. வலுவான பாறைகள் காரணமாக பணிகள் மெதுவாகவே நகர்ந்தது.

இந்நிலையில், இந்த இயந்திரம் தற்போது வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை கடந்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: “அடையாறு பகுதியில் பூமிக்கடியில் மண் மற்றும் கடினமான பாறைகள் நிறைந்துள்ளன. எனவே, சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் தோண்டுதல் கருவிகளை தொடர்ந்து மாற்ற வேண்டியிருப்பதால், இது மிகவும் சவாலானது. காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்த 2 மாதங்களாக வலுவான பாறைகள் உள்ள பகுதிகளில் இருந்தது. இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு சுமார் 1.5 மீட்டர் முதல் 2 மீட்டர் வரையே துளையிட்டது.

தற்போது,காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் வலுவான சுரங்கம் உள்ள பகுதிகளை கடந்துவிட்டது. இனி சுரங்கம் தோண்டும் பணி சீரான வேகத்தில் நடைபெறும். அடையாறு சந்திப்பை ‘காவிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடைய சுமார் 190 மீட்டர் தான் மீதம் உள்ளது. எனவே, காவிரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடுத்த மாதம் இறுதியில் அடையாறு சந்திப்பை அடையும். இதுபோல, ‘அடையாறு’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் மெதுவாகவே நகர்கிறது” என்றனர்.

You may also like

© RajTamil Network – 2024