Sunday, September 29, 2024

தீயணைப்பு துறை அதிகாரியின் பணி நீக்கம் சரியே: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

by rajtamil
0 comment 5 views
A+A-
Reset

தீயணைப்பு துறை அதிகாரியின் பணி நீக்கம் சரியே: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: ஹோட்டலில் தங்கிக்கொள்ள இலவசமாக அறை கொடுத்தால் தடையில்லா சான்று என்ற ரீதியில் செயல்பட்ட தீயணைப்புத் துறை அதிகாரியின் பணி நீக்கம் சரியானதுதான் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக தீயணைப்புத் துறையில் துணை இயக்குநராக பணியாற்றிய பரமசிவம் தனக்கு இலவசமாக தங்குவதற்கு அறை கொடுக்கும் தனியார் ஹோட்டல்களுக்கு தடையில்லா சான்றை உடனுக்குடன் வழங்கியுள்ளார். தனக்கு கீழ்மட்டத்தில் உள்ள அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை துறை ரீதியாக விசாரித்தும் தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பன போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக கடந்த 2013-ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து பரமசிவம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தீயணைப்புத் துறை அதிகாரியான பரமசிவத்தை பணி நீக்கம் செய்தது தவறு என தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஹோட்டலில் அறை எடுத்து தங்கியது எல்லாம் சாதாரணமானது. இதற்காக பணி நீக்கம் என்பது மிகப்பெரிய தண்டனை. எனவே இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹாஜா நசிருதீன், தீயணைப்புத் துறை அதிகாரியாக பணியாற்றிய பரமசிவம் மீது இதுபோல துறை ரீதியாக ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், இந்த அதிகாரி எங்கெல்லாம் ஹோட்டல்களில் தனக்கு இலவசமாக அறை கொடுக்கிறார்களோ அந்த ஹோட்டல்களுக்கு தடையில்லா சான்று வழங்க சாதகமாக செயல்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அவரை பணிநீக்கம் செய்தது சரிதான் எனக்கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024