Saturday, September 28, 2024

பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு நாளை மீண்டும் பேரணி – மம்தா பானர்ஜி திட்டம்

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்த வழக்கு மாநில காவல்துறையிடம் இருந்து சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு நீதி கேட்டும், முதல் – மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் இன்று தலைமைச் செயலகம் நோக்கி அனுமதியின்றி பேரணி நடத்தினர். பல்வேறு இடங்களில் இருந்து புறப்பட்டு சென்ற மாணவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மோதல் ஏற்பட்டு, வன்முறை வெடித்தது. போராடிய மாணவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர்புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டியடித்தனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஆளுங்கட்சிக்கு எதிராகவும், முதல்-மந்திரி பதவி விலக வலியுறுத்தியும் மாணவர் அமைப்பினர் இன்று மிகப்பெரிய அளவில் பேரணி நடத்தியது, கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் முதல்-மந்திரி மம்தாவும் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தலாம் என தெரிகிறது. கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் டாக்டருக்கு நீதி கேட்டு மம்தா தலைமையில் பேரணி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே கோரிக்கைக்காக கடந்த 16-ம் தேதி மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அவருடன் கட்சியினர் ஏராளமானோர் அணிவகுத்து வந்தனர். குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இன்று மாணவர் அமைப்பினர் பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில், மம்தா பானர்ஜி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like

© RajTamil Network – 2024