Saturday, September 28, 2024

மேற்கு வங்காளத்தில் பந்த் எதிரொலி; ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டிய ஓட்டுநர்கள்

by rajtamil
0 comment 16 views
A+A-
Reset

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. கொல்கத்தா நகரில் உள்ள பிரெசிடென்சி சிறையில் வி.ஐ.பி. வார்டில் சஞ்சய் ராய் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்து உள்ளது.

இதனை தொடர்ந்து கொல்கத்தா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி உத்தர் தினாஜ்பூர் மாவட்ட கூடுதல் எஸ்.பி. தெந்துப் ஷெர்பா கூறும்போது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க மாநிலத்தில் ஒவ்வோர் இடத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை நிகழ கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ள சூழலில், கொல்கத்தா நகரில் உள்ள அரசு பஸ்களின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஹெல்மெட் அணிந்து பஸ் ஓட்டி செல்லும்படி அரசு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

இதனை தொடர்ந்து வடக்கு வங்காள அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ்களை ஓட்டி சென்ற ஓட்டுநர்கள், கூச் பெஹார் பகுதிகளில் ஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டி சென்றனர். இதுபற்றி பஸ் ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, இன்று பந்த் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால், நாங்கள் ஹெல்மெட் அணிந்துள்ளோம். துறை அதிகாரிகள் எங்களுக்கு ஹெல்மெட் தந்துள்ளனர் என கூறியுள்ளார்.

ஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டி சென்றது பற்றி ஓட்டுநர் ஒருவர் கூறும்போது, எனக்கு சற்று அச்சம் ஏற்பட்டு உள்ளது. அதனால் பாதுகாப்புக்காக இதனை அணிந்துள்ளேன். இது அரசு உத்தரவு. பஸ் ஓட்டும்போது சற்று சிரமம் ஏற்படுகிறது என கூறியுள்ளார்.

போராட்டக்காரர்கள், ஹவுரா நகரில் உள்ள நபன்னா கட்டிடத்தில் அமைந்த மேற்கு வங்காள தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்தனர். எனினும், இதற்கு அரசு அனுமதி அளிக்காத சூழலில், நபன்னா அபியான் பேரணி நேற்று நடைபெற்றது.

இதில் மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைந்து போக செய்தனர். ஹவுரா பாலம், சான்டிராகாச்சி ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டக்காரர்கள் சிலரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

போராட்டக்காரர்கள் தலைமை செயலகம் நோக்கி செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தாக்க முற்பட்டனர். இதேபோன்று பாதுகாப்பு படையினரை நோக்கி கற்கள் மற்றும் செங்கற்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான போராட்டம் என்ற பெயரில் பா.ஜ.க. அராஜக செயல்களில் ஈடுபடுகிறது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024