‘மன்னிக்கவும், பெண் மருத்துவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும்’ – மம்தா

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு தொடங்கப்பட்ட இந்த நாளை உயிரிழந்த பெண் மருத்துவருக்கு அர்ப்பணிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர்(31) பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கம் மட்டுமின்றி நாடு முழுவதுமே இந்த சம்பவத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. உச்சநீதிமன்றம், மருத்துவ சங்கங்கள் கோரிக்கை விடுத்தும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மேற்குவங்க மாணவர் சங்கம் அறிவித்து தற்போது வரை போராட்டம் நடத்தி வருகிறது.

கொல்கத்தாவில் போராட்டம்: போலீசார் தடியடி, கண்ணீர் புகைக் குண்டு வீச்சு!

இந்த கொலை சம்பவத்தில் மருத்துவமனையில் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கல்லூரி முதல்வர் உள்ளிட்ட பலரிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேற்குவங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சியான பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு நிறுவப்பட்ட நாள் இன்று(ஆக. 28) கொண்டாடப்படுகிறது. பாலியல் கொலைக்கு உள்ளான பெண் மருத்துவரின் நினைவாக அவருக்கு இந்த நாளை அர்ப்பணிப்பதாக முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீது தடியடி: பாஜக நாளை போராட்டம்!

"சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் உயிரிழந்த துக்கத்திற்கு, திரிணமூல் சத்ர பரிஷத் நிறுவன நாளை அர்ப்பணிக்கிறேன். கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும். இந்தியா முழுவதும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் பாதிப்புக்குள்ளான அனைத்து வயது பெண்களுக்கும் இதயப்பூர்வமான அனுதாபங்கள். மன்னிக்கவும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "மாணவர்களும், இளைஞர்களும் பெரும் சமூகப் பங்காற்றுகின்றனர். சமுதாயத்தையும் கலாசாரத்தையும் விழிப்புடன் கவனித்து புதிய நாளுக்கான கனவை நனவாக்குவதும், சுற்றியுள்ள அனைவரையும் ஊக்குவிப்பதும் மாணவர் சமுதாயத்தின் பணியாகும்.

அவர்கள் அனைவருக்கும் இன்று எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முயற்சிக்கு ஊக்கமளிக்கவும். உறுதியுடன் இருங்கள். நலமுடன் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் இருங்கள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் மாணவர் பிரிவு நிறுவப்பட்ட நாளையொட்டி கொல்கத்தாவில் இன்று பிற்பகல் நடைபெறும் மாபெரும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி உரையாற்றவிருக்கிறார்.

முன்னதாக, நேற்று மாபெரும் பேரணியை மாணவர்கள் சங்கம் முன்னெடுத்த நிலையில், நபன்னா பகுதியில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் தங்கள் பேரணியைத் தொடர முயன்றனர். காவல்துறையினர் மீது கல் வீசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்ததும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களைக் கலைத்தனர். மேலும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து பாஜக இன்று 12 மணி நேர போராட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

© RajTamil Network – 2024