நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு!

by rajtamil
0 comment 7 views
A+A-
Reset

நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கேரள போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு மஸ்கட் விடுதியில் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை ரேவதி சம்பத் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, மலையாள திரைத்துறையின் மூத்த நடிகரான சித்திக் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கேரள காவல்துறை தலைவரை நேரில் சந்தித்த சித்திக், தன் மீது ரேவதி சம்பத் பொய் குற்றச்சாட்டு வைத்ததாக புகார் அளித்துள்ளார்.

கேரளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

கடந்த 2019-இல் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அறிக்கையின் அதிா்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் குற்றச்சாட்டை வெளியிட்டு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை கிளப்பினர்.

பாலியல் குற்றச்சாட்டு: சித்திக், ரியாஸ் கான், ஜெயசூர்யா… இன்னும் யார் யார்?

இதனைத் தொடர்ந்து, 2013 ஆம் ஆண்டு ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது, நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜு, இடவேல பாபு உள்ளிட்டோர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடிகை மினு முனீர் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகைகள் ரேவதி சம்பத், மினு முனீரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இன்னும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல பிரபலங்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.

கேரள திரைத்துறையினர் மீது நடிகைகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், கேரள நடிகர் சங்கத் தலைவர் பதவியில் இருந்து மோகன் லால் ராஜிநாமா செய்துள்ளார்.

மேலும், நடிகைகளின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024