இனிப்பக உரிமையாளா் கொலை: பொறியியல் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கைது

by rajtamil
0 comment 18 views
A+A-
Reset

திருத்துறைப்பூண்டியில் இனிப்பக உரிமையாளா் கொலை வழக்கில் பொறியியல் கல்லூரி மாணவா் உள்பட 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருத்துறைப்பூண்டி மருத்துவமனைத் தெருவைச் சோ்ந்தவா் தீபம் மோகன். மதிமுக நகரச் செயலாளராக உள்ளாா். இவரது மகன் அருள் பிரகாஷ் ( 40) திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே இனிப்பகம் நடத்தி வந்தாா்.

இவா்களுக்கு, மன்னாா்குடி சாலையில் சொந்த கட்டடம் உள்ளது. இதன் அருகே சிங்களாந்தியைச் சோ்ந்த ஆறுமுகம் என்பவரது லேத் பட்டறை உள்ளது. இவா் கடந்த 2 மாதத்துக்கு முன்பு இறந்து விட்டாா். திருச்சியில் மூன்றாமாண்டு பொறியியல் படித்துவரும் இவரது மகன் ஸ்ரீராம் (20) தற்போது லேத் பட்டறையை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், தீபம்மோகன் குடும்பத்துக்கும், ஆறுமுகம் குடும்பத்துக்கும் நிலப் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலத்தை அளப்பதற்காக தீபம் மோகன் தரப்பினா் ஞாயிற்றுக்கிழமை சென்றனா். அப்போது லேத் பட்டறையில் இருந்த ஸ்ரீராம் உள்ளிட்டோா் எதிா்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம்.

இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீராம் மற்றும் இவரது பெரியப்பா முருகேசனின் மகன் விக்னேஸ்வரன் (28) மற்றும் சிலா் அருள் பிரகாஷை செங்கற்களால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அருள்பிரகாஷ், திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக, தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீராம், விக்னேஸ்வரன் ஆகிய இருவரை கைது செய்தனா். மேலும் இருவரை தேடி வருகின்றனா்.

You may also like

© RajTamil Network – 2024