Saturday, September 28, 2024

மதுரை – கொல்லம் 4 வழிச்சாலை பணி: போதிய எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துகள்

by rajtamil
0 comment 12 views
A+A-
Reset

மதுரை – கொல்லம் 4 வழிச்சாலை பணி: போதிய எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்துகள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: மதுரை – கொல்லம் நான்கு வழி சாலை பணி நடைபெற்று வரும் நிலையில் வளைவுகள், மாற்றுப் பாதை ஆகியவற்றில் போதிய எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புகள், ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்தில் உள்ளனர்.

கேரளா – தமிழகம் இரண்டு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை வழித்தடமான 206 கிலோ மீட்டர் தூரம் உள்ள மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையை (என்.ஹெச்.208) நான்கு வழிச்சாலையாக (என்.ஹெச். 744) மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்தது. திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலைக்கான ஆய்வுபணிகள் முடிந்து வழித்தடம் குறித்த தகவல்களுடன் கடந்த 2021-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதில் முதற்கட்டமாக திருமங்கலம் முதல் வடுகபட்டி வரையிலான 36 கி.மீ தூரத்திற்கு ரூ.541 கோடிக்கும், வடுகபட்டி முதல் ராஜபாளையம் தெற்கு வெங்காநல்லூர் வரையிலான 36 கி.மீ தூரத்திற்கு ரூ. 723 கோடிக்கும் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் எம்.சுப்புலாபுரத்தில் இருந்து கிருஷ்ணன்கோவில் வரை தற்போதைய சாலையே நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. 80 சதவீத சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலைகள் இணைக்கப்படாமல் இருப்பதுடன், மேம்பாலம் மற்றும் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறன. சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் பகுதிகளில் சில இடங்களில் ஒரு வழிப்பாதையாகவும், சில இடங்களில் இரு வழிப்பாதையாகவும் மற்றுப்பாதை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதில் வளைவுகள், மாற்றுப்பாதைகள், சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், இணைக்கப்படாத சாலைகள் உள்ளிட்ட இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லாததால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது. மேலும், சாலையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் (பேரிகார்டு) ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாததால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

கடந்த மாதம் ஒரு வழிப்பாதையில் எதிர் எதிரே சென்ற ஆம்னி பேருந்தும் லாரியும் மோதி விபத்து ஏற்பட்டது. எச்சரிக்கை பலகை மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் கடந்த 18-ம் தேதி இரவு பயன்பாட்டிற்கு வராத புதிய சாலையில் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தனர்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விருதுநகரில் இருந்து கேரளாவிற்கு மளிகை பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி, மாற்றுப்பாதையில் திரும்பும் இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியை ஓட்டிவந்த விருதுநகர் அருகே முத்துராமன்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் என்பவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இப்படி அடிக்கடி நடக்கும் தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், “மாற்றுப்பதை மற்றும் பாலம் பணி நடைபெறும் இடங்களில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு முன்னரே எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். ஆனால் மதுரை – கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் மாற்றுப்பாதை மற்றும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மிக அருகில் மட்டுமே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

24 மணி நேரமும் போக்குவரத்து அதிகம் உள்ள இந்தச்சாலையில் இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் பொறுத்தாதால் கடும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மதுரை வழியாக வரும் சரக்கு வாகனங்கள் விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, சங்கரன்கோவில் வழியாக 40 கிலோ மீட்டர் வரை சுற்றி தென்காசி செல்கிறது.

நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், இரவில் ஒளிரும் வகையிலான ஸ்டிக்கர்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

You may also like

© RajTamil Network – 2024