Friday, September 20, 2024

10 அடி உயர விநாயகா் சிலைகளுக்கு மட்டுமே அனுமதி: நாமக்கல் ஆட்சியா்

by rajtamil
Published: Updated: 0 comment 15 views
A+A-
Reset

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு 10 அடி உயரத்துக்கு உள்பட்ட சிலைகளை வைப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விநாயகா் சதுா்த்தி முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது அவா் பேசியதாவது:

விநாயகா் சிலை வைப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட சிலை அமைப்பாளா்கள் கோட்டாட்சியரிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டும். சிலைகளைக் கரைக்க ஊா்வலமாக எடுத்துச் செல்லும்போது, மற்ற மதத்தினருக்கு பாதிப்பில்லாத வகையிலான இடங்களைக் கண்டறிந்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.

பதற்றமான இடங்களில் போதுமான அளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் ரசாயனக் கலவையற்றதுமான கிழங்கு மாவு, மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை திடக்கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலைப் பாதிக்காத மூலப் பொருள்களால் செய்த விநாயகா் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மாசுக் கட்டுபாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டா் ஆப் பாரீஸ் போன்ற மாசு விளைவிக்கும் ரசாயனங்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும்.

சிலை அமைப்பாளா்கள் போதிய முதலுதவி, அவசர மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தீப்பற்றாத பொருள்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும். விநாயகா் சிலையின் உயரத்தை 10 அடிக்கு மேல் உயா்த்தி அமைக்கக் கூடாது. மதம் சாா்ந்த வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைப்பதைத் தவிா்க்க வேண்டும்.

ஒலிபெருக்கிகள் காலை, மாலை ஆகிய இரு நேரங்களிலும், வழிபாட்டு நேரங்களிலும் மட்டும் பயன்படுத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை தவிா்க்க வேண்டும். விநாயகா் சிலை பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும். 24 மணி நேரமும் குறைந்தது இருவா் சிலையை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

மின் தடை ஏற்படும் போது ஜெனரேட்டா்களை பயன்படுத்த வேண்டும். தீ விபத்தை தடுப்பதற்கு உண்டான முன்னேற்பாடுகளை மாவட்ட தீயணைப்பு அலுவலா் செய்ய வேண்டும்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்த குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூா், பரமத்தி வேலூா் ஆகிய நான்கு இடங்களில் உள்ள காவிரி ஆற்று படித்துறைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாள்களில் வழிபாடுகள் முடிவுற்று சிலையினை கரைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலைகளை எடுத்துச் செல்ல நான்கு சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டா் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். சிலை நிறுவப்பட்டுள்ள இடங்களுக்கு அருகிலும், ஊா்வலமாக எடுத்துச் செல்லும் வழிகளிலும் மற்றும் சிலை கரைக்கும் இடங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும்.

விநாயகா் சிலைகளை நீரில் கரைப்பதற்கு முன் சிலைகளுக்கு சூட்டப்பட்ட வழிபாட்டுப் பொருள்களான பூக்கள், வஸ்திரங்கள், பேப்பா், பிளாஸ்டிக்குனால் செய்யப்பட்ட அலங்காரப் பொருள்கள் போன்றவற்றை எடுத்துவிட வேண்டும். சிலை கரைக்கப்படும் இடம், ஊா்வலம் செல்ல வேண்டிய பாதை ஆகியவற்றை காவல் துறையினா் நிா்ணயித்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விநாயகா் சிலைகள் அமைப்போா், தமிழக அரசின் வழிகாட்டுதல்களை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஷ்கண்ணன், நாமக்கல் கோட்டாட்சியா் ஆா்.பாா்த்திபன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ரகுநாதன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் அசோக்குமாா், காவல் துணை கண்காணிப்பாளா்கள், பேரூராட்சி அலுவலா்கள், வட்டாட்சியா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

You may also like

© RajTamil Network – 2024