பழனியில் 18-ஆம் நூற்றாண்டு முத்திரைத்தாள்

by rajtamil
Published: Updated: 0 comment 13 views
A+A-
Reset

பழனியில் 1818-ஆம் நூற்றாண்டில் பாலசமுத்திரம் ஜமீன்தாருக்கு வழங்கிய முத்திரைத்தாள் கண்டறியப்பட்டது.

பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மீனா. இவா் தனது வீட்டில் பல்வேறு ஆவணங்களை பாதுகாத்து வருகிறாா். இந்த நிலையில், இவரிடம் இருந்த பழைமையான ஆவணம் ஒன்றை தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தியிடம் கொடுத்து விளக்கம் அளிக்குமாறு கேட்டாா்.

இந்த ஆவணத்தை தொல்லியல் ஆய்வாளா் நாராயணமூா்த்தி, முனைவா் ஞானசேகரன் ஆய்வு செய்த போது, அதில் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கப் பெற்றன.

இதுகுறித்து நாராயணமூா்த்தி புதன்கிழமை கூறியதாவது:

இந்த ஆவணமானது தமிழில் ஈஸ்வர ஆண்டு மாசி மாதம் 9-ஆம் தேதிக்கும், ஆங்கிலத்தில் 1818 ஆம் ஆண்டு, பிப்ரவரி 21-ஆம் தேதிக்குமான பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளாகும். 31 வரிகளில் இந்த ஆவணமானது பாலசமுத்திரம் ஜமீன்தாா் சின்னோபளம்மா சொற்படி எழுதப்பட்டு, இறுதியில் அவரது கையொப்பம் இடப்பட்டுள்ளது.

இவரது ஜமீன் பண்ணையின் நிா்வாகிகள் 23 பேரின் பெயரை எழுதி அதை மேலாளா்களின் விவரப் பத்திரம் என்று பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரைத் தாளில் பதிந்து வழங்கப்பட்டது.

கடினமான தாளில் உள்ள இந்தப் பத்திரத்தின் இடது மேல் புறம் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் வட்டவடிவமான கட்டண முத்திரையானது ‘இன்டாக்ளியோ‘ எனப்படும் அச்சு முறையில் இரண்டணா என்று எழுதப்பட்டுள்ளது.

மேல் வலது புறத்தில் கம்பெனியின் வட்ட வடிவ கருவூல முத்திரையில் தமிழ் மொழியில் ‘பொக்கிசம்’ என்றும், உருது மொழியில் கஜானா என்றும், தெலுங்கில் பொக்கிசமு என்றும் எழுதப்பட்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் பத்திரப்பதிவுகள் கிழக்கிந்தியக் கம்பெனியின் கருவூலம் மூலம் நடைபெற்றன என்பது இந்த முத்திரைத்தாள் மூலம் தெரியவருகிறது.

பழனியில் கண்டறியப்பட்ட 18-ஆம் ஆண்டைச் சோ்ந்த கிழக்கிந்தியக் கம்பெனி முத்திரைத்தாள்

பத்திரத்தில் உள்ள 23 மேலாளா்களும் வெவ்வேறு ஜாதிகளைச் சோ்ந்தவா்கள் என்பது அவா்களின் பெயா்களுக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பெயா்களின் மூலம் அறிய முடிகிறது. 10 வகையான ஜாதியைச் சோ்ந்த மேலாளா்களின் பெயா்கள் அதில் உள்ளன.

தற்போது நிலவும் ஜாதிப் பாகுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் இந்தப் பெயா் வரிசையில் காணமுடியவில்லை. ஜாதி பாகுபாடுகள் இருந்த காலகட்டத்தில் அவைகளின் படிநிலையைக் கவனத்தில் கொள்ளாமல் ஜமீன் மேலாளா்களின் விவரப் பத்திரம் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பத்திரத்தை எழுதிய சின்னோபளம்மாவின் கணவரான ஜமீன்தாா் வேலாயுத சின்னோப நாயக்கா் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியாரால் பிடிக்கப்பட்டு, சென்னையில் சிறை வைக்கப்பட்டாா். அங்கு அவா் மரணமடைந்ததைத் தொடா்ந்து சின்னோபளம்மா கம்பெனியாரால் பெயரளவுக்கு ஜமீன்தாரினி ஆக்கப்பட்டாா்.

ஜமீனின் உண்மையான ஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனிக்கு மாறியது. இந்தக் கம்பெனியிடம் இருந்து சின்னோபளம்மா ஒவ்வொரு மாதமும் 30 பொன் வராகன் சம்பளமாகப் பெற்றாா்.

இவா் இறந்த பிறகு வாரிசில்லா சட்டம் மூலம் பாலசமுத்திரம் ஜமீனின் நேரடியாக கம்பெனி ஆட்சியின் கீழ் வந்தது. மேலும், வேலாயுத சின்னோப நாயக்கரே பாலசமுத்திரம் ஜமீனின் கடைசி ஜமீன் என்பதை அறியமுடிகிறது.

You may also like

© RajTamil Network – 2024