தகுதிநீக்கம் செய்ய யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை: பூஜா கேத்கர் வாதம்

by rajtamil
0 comment 17 views
A+A-
Reset

புது தில்லி: போலிச் சான்றிதழ் வழக்கில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர், தன்மீது நடவடிக்கை எடுக்க யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வாதத்தை முன்வைத்துள்ளார்.

போலியான ஓபிசி சான்றிதழ், மாற்றுத் திறனாளி சான்றிதழ் அளித்து, யுபிஎஸ்சி தேர்வெழுதுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகளையும் தாண்டி பெயரை மாற்றி தேர்வெழுதியதாக ஐஏஎஸ் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பூஜா கேத்கர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தன்னை தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்தும், முன்ஜாமீன் கோரியும் பூஜா கேத்கர் தாக்கல் செய்த மனு தில்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, யுபிஎஸ்சி தேர்வுகள் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் பூஜா கேத்கரின் நடவடிக்கைகள் இருந்ததாக நீதிமன்றம் கருத்து தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில், இன்று காலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பூஜா கேத்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், ஏற்கெனவே ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட தன்னை தகுதிநீக்கம் செய்ய யுபிஎஸ்சி-க்கு அதிகாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்லாபூர் சம்பவத்தில் திடீர் திருப்பம்: பள்ளிக்குக் குற்றவாளி வந்துசென்ற சிசிடிவி கிடைத்தது!

மேலும், சட்டப்படி மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மட்டுமே தன் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் தனது வாதத்தை பதிவு செய்துள்ளார்.

அதேபோல், 2012 முதல் 2022 வரை தாக்கல் செய்த விண்ணப்பத்தில் முதல் பெயரிலும் குடும்பப் பெயரிலும் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்றும், பயோமெட்ரிக் தரவுகளை யுபிஎஸ்சி சரிபார்த்துள்ளதாகவும் பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், அதுவரை பூஜா கேத்கரை கைது செய்ய காவல்துறைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

You may also like

© RajTamil Network – 2024