ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் யு.பி.ஐ. வழியே ரூ.81 லட்சம் கோடி பணபரிவர்த்தனை

by rajtamil
0 comment 4 views
A+A-
Reset

புதுடெல்லி,

உலகம் முழுவதும் பணபரிவர்த்தனை மேற்கொள்வது தற்போது டிஜிட்டல்மயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் வழியே மேற்கொள்ளப்படும் இந்த பணபரிவர்த்தனைகளால், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களுடன் கரன்சி நோட்டுகளை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியமில்லை. பாதுகாப்பான முறையில், எளிதில் பணபரிமாற்றம் நடந்து விடும்.

இதில், உலக நாடுகளை பின்னால் தள்ளி இந்தியா அதிக பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருவது ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. உலகளாவிய பணம் செலுத்தும் அமைப்புகளில் ஒன்றான பேசெக்யூர், இதுபற்றி ஆய்வு மேற்கொண்டு சமீபத்தில் அதன் முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

இதன்படி, நடப்பு ஆண்டில் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் இந்தியாவின் யு.பி.ஐ. வழியே ரூ.81 லட்சம் கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 37 சதவீதம் அதிகம் ஆகும். இதன்படி யு.பி.ஐ. வழியே, ஒரு விநாடிக்கு 3,729.1 முறை பணபரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

2022-ம் ஆண்டு இந்த பணபரிமாற்றம், ஒரு விநாடிக்கு 2,348 முறை என்ற அளவில் இருந்தது. நடப்பு ஆண்டில் இந்த பணபரிமாற்றம் 58 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதனால், சீனாவின் அலிபே, பேபால் மற்றும் பிரேசில் நாட்டின் பிக்ஸ் ஆகியவை பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளன என அந்த தரவு தெரிவிக்கின்றது.

இதேபோன்று, கடந்த ஜூலையில், ரூ.20.6 லட்சம் கோடி அளவிலான பணபரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது, ஒரு மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிக அளவாகும். இதுதவிர, தொடர்ந்து 3 மாதங்களாக ரூ.20 லட்சம் கோடிக்கு கூடுதலாக பணபரிமாற்றங்கள் நடந்து உள்ளன.

You may also like

© RajTamil Network – 2024