Wednesday, September 25, 2024

ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: பாஜக உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதி மாற்றம்

by rajtamil
0 comment 9 views
A+A-
Reset

ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் உத்தரவின்பேரில் வாக்கு எண்ணும் தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4-ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.

இது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முஃப்தி கூறியதாவது:

பாஜகவுக்கு எது வசதியானதோ அதை தேர்தல் ஆணையம் செய்கிறது. நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது வாக்குப்பதிவு தேதியை அவசியம் இல்லாமல் தேர்தல் ஆணையம் மாற்றியது. பாஜக மற்றும் அதன் ஆதரவுக் கட்சிகளின் விருப்பத்துக்கு ஏற்ப அனைத்தும் செய்து தரப்படுகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் தேதியை பாஜகவின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

தேர்தலையொட்டி உயர் போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து உயரதிகாரிகளும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நியாயமான, பாரபட்சமற்ற முறையில் தேர்தல் நடத்துவதை உறுதிப்படுத்துவர் என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

கடந்த 1987-இல் என்ன நடந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்போது நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட ரத்தக்களரி இன்றளவும் நிற்கவில்லை.

எனினும், தற்போது சட்டப் பேரவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுப் பணியாளர்கள் அனைவரும் சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த துணைநிற்பார்கள் என்று நம்புகிறேன் என்றார் அவர்.

இதனிடையே, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஸ்ரீநகரில் மெஹபூபா முஃப்தி முன்னிலையில் மக்கள் ஜனநாயகக் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனர். அவர்களில் பிரிவினைவாதத் தலைவரும், ஹுரியத் மாநாட்டுக் கட்சி உறுப்பினரான சையது சலீம் கிலானியும் ஒருவர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "மக்களின் ஜனநாயக உரிமைகள், மனித உரிமைகள், அரசியல் உரிமைகள் ஆகியவை குறித்து பேசும் கட்சி மக்கள் ஜனநாயகக் கட்சி. காஷ்மீர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு குறித்து அக்கட்சி பேசுகிறது. எனவே, அக்கட்சியில் இணைவதே சரியானது எனக் கருதினேன்' என்று தெரிவித்தார்.

You may also like

© RajTamil Network – 2024