Tuesday, September 24, 2024

காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வில் 11 இளைஞர்கள் உயிரிழப்பு! முதல்வர் இரங்கல்

by rajtamil
0 comment 19 views
A+A-
Reset

ஜார்க்கண்ட்டில் காவலர் பணிக்கான உடற்தகுதித் தேர்வின்போது 11 தேர்வர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் காவல்துறையில் சுமார் 600 கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான உடற்தகுதித் தேர்வு கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி 7 மையங்களில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உடற்தகுதித் தேர்வில் கலந்துகொண்ட தேர்வர்கள் பலர், வெயிலில் அதிக நேரம் பயிற்சியில் ஈடுபட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 11 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களி சிலர் ஸ்டீராய்டு உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொண்டு தேர்வுக்கு வந்திருந்ததே உடல்நலக்குறைவுக்கு காரணமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட்டின் பலமுவில் உள்ள மையத்தில் 4 பேர், கிரிதியில் உள்ள மையத்தில் 2 பேர், ஹஸாரிபாக்கில் உள்ள மையத்தில் 2 பேர், ராஞ்சி, மொசபானி, சாஹேப்கஞ்ச் பகுதியில் ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், காவலர் உடற்தகுதித் தேர்வில், தேர்வர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை ஐ.ஜி. அமோல் வி. ஹோம்கர் தெரிவித்துள்ளார். அனைத்து தேர்வு மையங்களில் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், நடமாடும் கழிப்பறைகள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிகாரிகளின் மெத்தனப்போக்கே தேர்வர்கள் உயிரிழப்புக்கான காரணமென எதிர்க்கட்சியான பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஆளும் ஜார்க்கண்ட் முத்தி மோர்ச்சா அரசைக் கண்டித்து பாஜக இளைஞர் பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆக. 30-ஆம் தேதி வரை நடைபெற்ற காவலர் தேர்வில், மொத்தம் 1.27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், 78,023 பேர் தேர்ச்சி பெற்று அடுத்தக்கட்ட தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காவலர் பணியில் சேரும் கனவுடன் தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்துக்கு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வருத்தம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் மிகுந்த மன வேதனையை அளிப்பதாய் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கான்ஸ்டபில் பணிக்கான தேர்வை 3 நாள்களுக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டுள்ள ஹேமந்த் சோரன், காலை 9 மணிக்கு பிறகு, உடற்தகுதித் தேர்வை நடத்தக்கூடாதென காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

You may also like

© RajTamil Network – 2024