Tuesday, September 24, 2024

தெலங்கானாவில் கனமழை: 16 பேர் உயிரிழப்பு! ரூ. 5,000 கோடி இழப்பு!

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது. இதையொட்டி பெய்த தொடா் கனமழையால் தெலங்கானா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தெலங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டியுடன் தொலைபேசி வாயிலாக மழை பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை(செப். 1) கேட்டறிந்தார்.

மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், தெலங்கானாவில் மழை பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், மழை பாதித்த பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்தபின், வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மழை பாதிப்புகளில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கம்மம் பகுதியை பார்வையிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி

வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள கம்மம், பத்ராரி கோத்தகுடம், மகபூபாபாத், சூர்யபேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரூ. 5 கோடி நிதியை உடனடியாக விடுவிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

கனமழை வெள்ளத்தால் தெலங்கானாவில் ரூ. 5,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு தெலங்கானாவுக்கு ரூ. 2,000 கோடி நிதியை விடுவிக்கவும் ரேவந்த் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார். பிரதமர் மோடி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள கனமழை பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மாநில அரசு தரப்பில் கடிதம் எழுதப்படும் என்றும், வெள்ள பாதிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் மாநில அரசு தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

© RajTamil Network – 2024