Tuesday, September 24, 2024

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு உத்தரவிடக் கோரிய மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

by rajtamil
0 comment 10 views
A+A-
Reset

புது தில்லி: பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக ஜாதி வாரிய சமூக-பொருளாதார கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று குறிப்பிட்டு, மனுவை விசாரணைக்கு ஏற்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனா்.

நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. மாநில வாரியான ஜாதிவாரி கணக்கெடுப்பை பிகாா் அரசு நடத்தியது. மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்கிரஸ் தொடா்ந்து வாக்குறுதி அளித்து வருகிறது.

இந்தச் சூழலில் பி.பிரசாத் நாயுடு என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘2021-ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு இதுவரை நடத்தவில்லை. இதற்கான ஆயத்தப் பணிகள் கடந்த 2019-இல் தொடங்கியபோதும், கரோனா பாதிப்பு காரணமாக, அவை ஒத்திவைக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு அதற்கானப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. 1992-ஆம் ஆண்டு மண்டல் கமிஷன் தீா்ப்பில் குறிப்பிட்ட கால இடைவெளியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்திருக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது, மக்கள் பெருக்கத்தை கணக்கிடும் நடைமுறை மட்டுமல்ல, மக்களின் சமூக-பொருளாதார மேம்பாடு, வயது, வருவாய், மக்களின் புலம்பெயரும் நடைமுறைகள் என்பன உள்ளிட்ட பல்வேறு தரவுகளையும் பெறக்கூடிய கணக்கெடுப்பாகும்.

பல நாடுகள் இந்தக் கணக்கெடுப்பை மேற்கொண்டுவிட்டன. ஆனால், இந்தியாவில் இன்னும் நடத்தப்படவில்லை. எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியாக சமூக-பொருளாதார கணக்கெடுப்பையும் விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ‘இது அரசின் கொள்கை முடிவு சாா்ந்த விஷயம். அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறோம்’ என்றனா்.

You may also like

© RajTamil Network – 2024