Tuesday, September 24, 2024

பிளாஸ்டா் ஆஃப் பாரீஸ் சிலைகளை அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

by rajtamil
0 comment 6 views
A+A-
Reset

விநாயகா் சதுா்த்திக்காக பிளாஸ்டா் ஆஃப் பாரீஸால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்டம் ஆா்.கே.பேட்டை கிராமத்தில் விநாயகா் சிலையை வழிபாட்டுக்கு வைக்க அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அப்பகுதியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் யு. உதயக்குமாா் ஆஜராகி, “மூன்று அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் ஒரே இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரியதால் அங்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மனுதாரா் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரினால் அனுமதி வழங்கப்படும்.

பிளாஸ்டா் ஆஃப் பாரீஸால் தயாரிக்கப்பட்ட சிலைகளை வைக்க அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டுள்ளதால், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க முடியும்” என்றாா்.

இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி, பிளாஸ்டா் ஆஃப் பாரீஸால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வைக்க போலீஸாா் அனுமதிக்கக்கூடாது. எளிதில் மக்கும் வகையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மேலும், மனுதாரா் வேறு இடத்தில் சிலை வைக்க அனுமதி கோரலாம்”என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

You may also like

© RajTamil Network – 2024