Wednesday, November 6, 2024

பசு கடத்தல் புரளி: காரை 25 கி.மீ துரத்தி சென்று பள்ளி மாணவனை சுட்டுக்கொன்ற பசு பாதுகாப்பு கும்பல்

by rajtamil
0 comment 8 views
A+A-
Reset

சண்டிகர்,

அரியானா மாநிலம் பரிதாபாத் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஆரியன் மிஸ்ரா (வயது 19). இவர் 12ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதனிடையே, ஆரியன் மிஸ்ரா கடந்த 23ம் தேதி நள்ளிரவு தனது நண்பர்களுடன் நூடுல்ஸ் சாப்பிட காரில் சென்றுள்ளார். காரில் ஆரியன் மிஸ்ரா அவரது நண்பர்களான ஹர்ஷத், ஷங்கே மற்றும் 2 இளம் பெண்கள் பயணித்துள்ளனர்.

இந்நிலையில், பரிதாபாத் பகுதியில் காரில் பசு கடத்தப்படுவதாக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பசு பாதுகாப்பு கும்பலுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த கும்பலை சேர்ந்த அனில் கவுசிக், வருண், கிருஷ்ணா, அதேஷ், சவுரப் ஆகியோர் காரில் புறப்பட்டுள்ளனர்.

ஆரியன் மிஸ்ரா பயணித்த காரை பசு பாதுகாப்பு கும்பல் பார்த்துள்ளது. இதனால், அந்த காரை கும்பல் விரட்டியுள்ளது.

முன்னதாக காரில் இருந்த ஹர்ஷத், ஷங்கே ஆகியோருக்கும் பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்த ஒருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், முன்விரோதம் காரணமாக காரை தடுக்க கும்பல் முயற்சிப்பதாக நினைத்த ஹர்ஷத் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

கார் வேகமாக செல்வதை உணர்ந்த பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்தவர்கள் அந்த காரில் பசு கடத்தப்படுவதாக நினைத்து விரட்டி சென்றுள்ளனர்.

25 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை பசு கடத்தல் கும்பல் விரட்டி சென்றுள்ளது. அப்போது, பசு கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஆரியன் மிஸ்ரா பயணித்த காரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆரியன் மிஸ்ரா மீது குண்டு பாய்ந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ஆரியனின் மிஸ்ராவின் நண்பர் ஹர்ஷத் காரை நிறுத்தியுள்ளார். கார் நின்றதும் அங்கு சென்று பார்த்த பசு பாதுகாப்பு கும்பல் காரில் பசு எதுவும் கடத்தப்படவில்லை என்பதை அறிந்ததும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அதேவேளை, பசு கடத்தலில் ஈடுபடுகின்றனர் என்ற புரளியால் பசு பாதுகாப்பு நடத்திய துப்பாக்கி சூட்டில் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த பள்ளி மாணவன் ஆரியன் மிஸ்ரா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், விரைந்து வந்து ஆரியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய பசு பாதுகாப்பு கும்பலை சேர்ந்த அனில் கவுசிக், வருண், கிருஷ்ணா, அதேஷ், சவுரப் ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.

You may also like

© RajTamil Network – 2024